Thursday, November 10, 2016

வள்ளுவம்.

தமிழ் மறையாளர் வள்ளுவர். 


திருக்குறள் 
- அறத்துப்பால் 

வடமொழியில் அறவழியை சொல்வது வேத, இதிஹாச, புராணங்கள். மனு நீதி சாஸ்திரங்கள். 
பொருள் பற்றிய சாஸ்திரம் கௌடில்யரின் அர்த்த சாஸ்திரம்.
காமவியல் பற்றிய சாஸ்திரம் வாத்ஸ்யாயனரின் காம சூத்திரம்.
இவை அனைத்துமாக சேர பிடித்து சொல்லுகிற ஒரே தமிழ் நூல் திருக்குறள். இப்படிப்பட்ட திருக்குறளில் 
அறத்துப்பாலோடு பொருட்பால், காமத்துப் பால் இரண்டும் சேர்ந்து இருந்தாலும் இது ஒரு அறநூல் என்றே போற்றப்படுகிறது . காரணம் பொருளிலும், காமத்திலும் அறமானவற்றையே வலியுறுத்துவதால். 

அதில் அறத்துப்பால் பற்றி சிறிது ஆராய்வோம் :-  
மனு பகவான் வர்ணங்களை குறிப்பிடும்போது செய்கிற தொழிலின் அடிப்படையில்  பிரம்ம, க்ஷத்ரிய, வைஸ்ய, சூத்ரன் என்றும்,  ஆஸ்ரமங்களை கற்பது, வாழ்வது, ஓய்வது, உதறுவது என்கிற அடிப்படையில் பிரம்மச்சரிய, க்ருஹஸ்த, வானப்ரஸ்த, சன்யாசம் என்று நாலு நாலாகப்  பிரித்து நீதிகளை சொன்னார். வள்ளுவர் அதனை இல்லறம் துறவறம் என்கிற இரண்டாக வகுத்துக் கொண்டார். காரணம் 
இல்லறம் துறவறத்தில் சேர்ப்பது . இல்லறத்தில் இருந்தபடியே ஒவ்வொன்றாக விடப் பழகுவது வானப்ரஸ்தம். பிறகு முற்றாக விடுவது துறவறம். பிரம்மச்சர்யம் என்பது இல்லறத்தின் ஆயத்த நிலை. அதுபோல வானப்பிரஸ்தம் என்பது துறவறத்துக்கு ஆயத்த நிலை என்பதால் வள்ளுவர்  அறத்துப்பாலில் இல்லறவியல், துறவியல், ஊழ்வியல் என்று மூன்று பிரிவுகளைச் செய்தார். இதில் கற்கைக்குரிய ஆஸ்ரமம் ஆன பிரம்மச்சரியம் இல்லறத்திலும் , அடுத்த தலைமுறை தலை எடுத்த பின்பு, முந்தய தலைமுறை ஓய்வு கொள்ள விலகுதலாகிற வானப்ரஸ்தம், துறவிலும் அடங்கும் என்பதாக அவைகளை உள்ளடக்கிய இல்லறம், துறவறம் ஆகிய இரண்டுக்கு மேல் ஊழ் என்று கர்மத்தால் வினைபயன் சூழ்வதை உழ்வியல் பகுதியிலும் சொன்னார் . 

ஊழ், விதி, தெய்வம் இவை எல்லாம் ஒருபொருள் கிளவிகள். அறத்தின் பயனாக விளைவது ஊழ். ஒருவன் முற்பிறவியில் செய்த அல்லது இந்த பிறவியிலே செய்த அறச் செயல்கள் தான் அவனுக்கு ஊழாக விளைகின்றன. ஊழின் பயனாக  விளைவது பொருளும் , இன்பமும். எனவே இந்த ஊழ்வியல் , இல்லறம், துறவறம் இரண்டை அடுத்தும், பொருட்பால், காமத்துப் பாலுக்கு முன்பாகவும் நடுநாயகமாக அமைக்கப் படுகிறது. இந்த ஊழியலில் ஒரே ஒரு அதிகாரம் மட்டுமே உள்ளது. 

இல்லறத்தில், கணவன் மனைவி இருவரும் பேண வேண்டிய தர்மங்கள் அனைத்தையும் 25 அதிகாரங்களில்  சொல்லி முடிக்கிறார் வள்ளுவர். அதன்படி வாழ்ந்தவன் எவரும் கெட்டதும் இல்லை . வீழ்ந்ததாகவும் வரலாறு இல்லை.  இல்லறத்துக்கு அடிப்படை அன்பு. துறவறத்துக்கு அடிப்படை அருளுடைமை. 

இல்லறத்தில் இருப்பவன் செய்ய வேண்டிய கடமைகள் 11. அதனை நல்ல முறையில் செய்ய வேண்டி வள்ளுவன் காட்டும் படிக்கட்டு 
நல்லமனைவி 
மழலைச் செல்வம் -> தம் மக்களாகிற குழந்தை பால் அன்பு -> அந்த அன்பு விரிவடைகிற போது 
விருந்து 
நன்றி உடைமை 
நடுவு நிலைமை  -> சமூகத்தோடு தொடர்பு விளைந்து, அத்தாலே 
அடக்கமுடைமை -> மன, மெய், மொழிகளால் விளைகிற குற்றங்கள் களைந்து சமுதாய நலம் பெருக 
ஒப்புறவு , ஈகை -> அத்தால் 
புகழ்   = வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் என்பதான புகழ் விளையும் என்பதோடு வள்ளுவர் சொல்லுகிற இல்லறவியல் முடிகிறது. 

அந்த வகையில் இல்லறத்தில் இருப்பவனுக்கு 
முதல் பொறுப்பு - பிரம்மச்சாரி, வானப்ப்ரஸ்தன், துறவி ஆகிய மூவருக்கும் உணவளித்து காப்பாற்ற வேண்டுதலாகிற கடமை. பெறுபவர்களுக்கு இது உரிமையும் கூட.
அடுத்து துறந்தார் = கைவிடப்பட்டவர்கள், 
துவ்வாதார் = ஏழ்மையில் இருப்பவர்கள், 
இறந்தார் = அநாத பிரேத சம்ஸ்கார பொறுப்பு 
ஆகிய மூன்று வர்க்கத்தினருக்கும் இல்வாழ்வான்  என்பான் துணை. அதோடு 
தென்புலத்தார் = பித்ரு கடன் 
தெய்வம் = தேவ கடன் 
விருந்து = அதிதி = நட்பால் அறிந்து வருபவர்கள் + தேசாந்திரியாக அறியாது வருபவர்கள் இவர்களையும் ஆதரிப்பது.
ஒக்கல் = தன்னை விட ஏழ்மையில் இருக்கிற உறவினர்களுக்கு செய்யும் உதவி. 
தான் = தனக்குமாக பகிர்ந்து   
இவைகளைச் செய்யும் போது பொய், களவு, சூது செய்து வருகிற பொருளைக் கொண்டு அல்லாமல் பழிக்கு அஞ்சி அறவழியில் ஈட்டிய பொருளைக் கொண்டு பகுத்து உண்ண வேண்டும் என்பது வள்ளுவர் முறைமை. 
இவை அனைத்தும் ஆண் பாலில் வைத்துச் சொன்ன வள்ளுவன், பெண்களுக்கும் இரண்டு கடமைகளைச் சொன்னான். அவை 
1. மனைத்தக்க மாண்பு.
2. வளத்தக்க வாழ்வு 
என்றால் பெரியவர்கள் முதல், பிள்ளைகள், கணவன் அனைவருக்கும் சுவைபட சமைத்து, பரிமாறி, சுகித்து இருத்தல். கணவன் செய்ய வேண்டிய தர்மங்களில் தூண்டுபவளாகவும், துணைபோகிறவளாகவும் , புக்ககம், பிறந்தகம் ஆகிய இருவீட்டார் களின்  பெருமைகளை பேணி, பாதுகாப்பவளாகவும் இல்லற வாழ்க்கையை வழிநடத்த வேண்டும் பெண்..
அதுவும் கணவன் ஈட்டிய  பொருள் பெருமதிக்குள் குடும்பத்தை நடத்தி சேமிப்பது சிக்கனமாய் வாழ வேண்டும் என்பதை . 
தற்காத்து தற்கொண்டான் பேணி தகை சார்ந்த 
சொற்காத்து சோர்விலாள் பெண். 
என்பதாக , தன் கண்ணியத்தோடு, கணவனுடைய கண்ணியத்தையும் காக்க வேண்டிய பொறுப்பு இல்லாளுக்கு  இருப்பதால் ஆண்களைவிட, பெண்ணின் பெருமையே திருவள்ளுவர் உயர நோக்குகிறார். 

துறவியல் = விரதம், ஜ்ஞானம் என்று இரண்டு கூறுகளாக பேசப்படுகிறது. இல்லறத்துக்கு அன்பு போல, துறவறத்துக்கு 
அருளுடைமை அடிப்படை. அதுவிளைய 
புலனடக்கம் -> ஐம்பொறிகளையும், மனதையும் கட்டுக்குள் கொண்டு வர விரதங்கள். புலன்களை அடக்கினால் 
நிலையாமை 
துறவு 
மெய்யுணர்வு  
அவா அறுத்தல்  
ஆகிற ஜ்ஞானம் பிறக்கும் என்ற இவ்விஷ்யதைச் சொல்லவே திருவள்ளுவர் 133 அதிகாரங்களைப் இயற்றினார் என்றால் தவறில்லை. அப்படிப்பட்ட வித்தையால் மட்டும் பயனில்லை. வாசிப்பும் , படிப்பும் , அனுபவத்தில் ஏற்றி வாழ வேண்டும். அப்போதுதான் கல்வி அறிவாகும். அப்படி திருவள்ளுவர் சொன்ன ஒழுங்கின்படி வாழ்கிற இல்லறத்தில் இருக்கிற ஒருவனுக்கு புகழ் (அ ) துறவறத்தில் இழிந்தவனுக்கு அவா அறுத்தல் ஆகிற பலன் தடை பட்டால் அதற்கு பெயர் தான் விதி​ .அதனைச் சொல்ல வந்ததே  ஊழ்வியல்.​ 

விதி என்​றால்​ என்ன? நாம் செய்கின்ற செயலுக்கு சமமானதும், எதிரானதுமான வினை நம்மை வந்து சேரும் என்பது ​நம்பிக்கைக்கு கலந்த ​சமயம்​ சார்ந்த விஷயம். ​ Every force has an equal and opposite reaction - This is Science. 
வினையின் பயன் அப்போதைக்கு அப்போதே விளைவதில்லை. அது பக்குவப்படும் போது தான் நம்மை வந்து சேரும். 
எதைப்போல என்றால் கீரை, தென்னை இரண்டையும் ஒரே சமயத்தில் விதைத்தாலும் இரண்டும் ஒரே காலத்தில் முளை விடுவதில்லை. கீரை ஓரிருநாளிலும், தென்னை சில மாதங்கள் கழித்தும் முளைப்பது போல காலாந்தரங்களில் இந்த விதியை நமக்கு கூட்டுவது இறை செயல்.

பிரளய ஆதியிலே அஸத் கல்பமாக சூக்ஷும அவஸ்தையில் தன்னுடைய சரீரத்தோடு ஒட்டிக் கிடக்கிற பிரகிருதி-ஜீவ சமஷ்டியின்  ஒட்டு விடுவித்து - ஸ்தூல அவஸ்தைக்கு - மூல பிரக்ருதியை 24 தத்துவங்களாக (பஞ்சீகரண முறையில்) பெருக்கி , ஆத்மாவை அவரவர்கள் கர்ம வினைக்கு சேர ஒரு சரீரத்திலே புகுத்தி தான் உள்ளுறைதலாகிற (அந்தப்பிரவிஸ்ய நியமன)  காரியத்தை இறைவன்தான் செய்கிறான் . இந்த வினைகள் அநாதியான படியால் அவை ஒரு ஜென்மத்தில் முடிபவை அல்ல. அப்படிப்பட்ட பாவ-புண்ணிய சுமைகளில் ஒரு பகுதியை எடுத்து அதற்கு ஏற்ப தனு , மன, ஸ்தான, போகங்களை  விதிவத்தாக அவரவர்களுக்கு சேர்ப்பிக்கிறான். இதனை - ஸமஷ்டி ஸ்ருஷ்டி என்று தான் நேர்முகமாக சிலவற்றையும், வியஷ்டி ஸ்ருஷ்டி என்று தன்னால் படைக்கப் பட்ட பிறப்புக் கடவுளான பிராமனைக் கொண்டும் செய்கிறான்.  இப்படி கிடைக்கிற ஜென்மம் பிராரப்த (பயன் கொடுக்க தொடங்கிய) கர்மத்தால் வருவது. செலவு போக மீதம் உள்ள கர்மாக்கள் சஞ்சிதம் என்று மூட்டையாக இறைவனுடைய நினைவில் நிற்கும். அத்தோடு நடக்கிற பிறவியில் செய்த வினைகள் செலவு போக கூடிக்கொண்டு போகும். 

மன, மொழி, காயங்களால் செய்த நல்வினை -தீவினை இரண்டும், உடலால் செய்தவை உடலுக்கும், மொழியால் செய்தவை வாக்கின் வழியும் , மனதால் செய்தவை கனவிலும் எதிர்வினையை விளைத்துக் கழியும் என்பது நியதி. விதி என்பது அனுபவத்துக்கு வர வர அதன் பாரம் குறைந்து கொண்டே போகும். ஆக, அவை அனுபவித்தே அற வேண்டும்.என்றாலும்  உலகில் துருவன், ஹனுமான், மார்க்கண்டேயன் என்று சிரஞ்ஜீவிகள் பலரைச் சொல்லுகிறோமே, அவர்கள் விதியை வென்றவர்கள் ஆகிறார்களே ? அப்படி பகவத் பிரசாதத்தாலே வினைகள் களைய முடியும் என்றால் விதியை வெல்ல முடியும் தானே ? என்றால் 
ஆசை, கோபம், பந்தம், பாசம், என்று உலக இயலில் இருப்பவர்கள் விதியை வெல்ல முயற்சித்தாலும் இயலாது. உற்ற சமயத்தில் ஊழ் வந்து உறுத்தும். ஆனால்  இறைவழிபாட்டால், இறை அருளால் அதனை லகுவாக்கலாம் என்பதே நம்முடைய மதம் சார்ந்த வாழ்வியல். இதுவே திருக்குறள் காட்டுகிற அறத்துப்பால் கருத்து. நம்புங்கள் நாராயணனை, நலம் பெறுவீர்.  

சமஸ்கிருத பாஷைக்கு அப்பெயர் வரக்காரணம் அது இலக்கிய இலக்கணங்களால் நன்கு வரையறுக்கப்படதோடு மட்டுமல்லாமல் நிருக்தம் என்கிற Etymology ஆல் origin of words and it’s root word கொண்டு விளக்கும் வகை அமைந்துள்ள படியால்.

சமஸ்கிருதம் போலே எல்லா தமிழ் சொற்களுக்கும் etymology கூறமுடியாது. இதில் பல இரவல் சொற்களும் உண்டு. அந்த வகையில் 
தமிழ் மொழிக்கு அப்பெயர் வரக்காரணம் 
த + இழ் (=இழியாத)
த = கொடுத்தல், ஈதல் என்கிற பொருளில் தமிழ் பல திராவிட மொழிகளைக் ஈந்துள்ளது.
தமிழ் = மலையாளம், கன்னடம், தெலுங்கு, துளு போன்ற மொழிகளை ஈந்தும் தம்மில் இழியாது தனித்து விளங்குவதால் தமிழ் என்றாயித்து என்று காரணப்பெயராக இதனைச் சொல்லுவர்.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
எப்படி உலக படைப்புக்களக்கு
ஆதி பகவன் = அகார வாச்யனான விஷ்ணு காரணமோ, அதுபோல ஸப்த ராசிகளின் ஜனகன் அகாரம் என்பது வள்ளுவர் வாக்கு.
பகவன் = விரிஞ்சி. வியஷ்டி ஸ்ருஷ்டி கர்த்தா.
ஆதி பகவன் = விரிஞ்சி கர்த்தா. ஸமஷ்டி ஸ்ருஷ்டி கர்த்தா.
அ = அகாரார்த்தோ விஷ்ணுஹு ஸ்ருஷ்டி ஸ்திதி பிரளய கிருது (பட்டர்).
அ உயிரெழுத்துக்களில் முதல் எழுத்து.
க = க இதி பிரம்மா.
விஷ்ணுவை அந்தரயாமியாக க் கொண்டு பிரம்ம ஸருஷ்டி போலே
க் + அ = க உயிர் மெய்யெழுத்துக்களின் பிரவர்தனம். எனவே திழிழ் நாராயணனிடம் இருந்து பிறந்தது.
சமஸ்கிருத எழுத்துக்கள் ருத்ரனின் டமருவில் இருந்து பிறந்தது என்பதால் ஆதி சொல்லக் கூடும். அந்த சிவனும் பிரமனின் படைப்பே என்பதால் தமிழ் அதற்கும் முற்பட அநாதி.
ஆதி = Eve
பகவன் = Adam
என்று சொல்வாரும் உண்டு.
இவர்கள் பகவானின் இச்சா சக்தி (ஞானம்) மற்றும் க்ரியா சக்தி (பிரயத்தனம்) எனலாம். அது பகவானும் பிராட்டியுமே அன்றோ?

கோல் தேடி ஓடும் கொழுந்ததேபோல் 
மால் தேடி ஓடும் மனம் 

என்பதற்குச் சேர மனிதன் பிறக்கும்போதே உண்டாவது இறை உணர்வு. அந்த இறை உணர்வு பூர்ணத்வம் பெற , தான் பிறப்பதற்கு காரணமான

1. முழுமுதற் கடவுளை (ஆதிபகவன் அவனை) முதல் குறளுக்கு விஷயமாக்குகிறார் வள்ளுவர்.  இதன் விரிவாக்கம் மேலே காணலாம் .

2. தூய அறிவு கொண்டு ஓவுதலே மெய்ஞானம். தத்வ ஞானாது மோக்ஷலாபம். அந்யாது ஸம்ஸாரம் என்கிற வேத நெறியாளர் வழக்கை இரண்டாவது குறள் பேசுகிறது. 

3. அந்த அறிவின் பயன் வீடு பெற்று நீடு வாழ்வது. இது 3வது குறளுக்குப் பொருள்.

4. அந்த நிலையில் பசி, பிணி, மூப்பு ஆகிற இடும்பை கூறுலகத்திநின்றும் விமுக்தி என்கிறது குறள் நான்கு.

5. ''வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்து '' என்கிறபடி ''அவாகி, அநாதர : ''  என்றும் வைஷம்ய, நைர்கிருண்யாதி பாரபாக்ஷம் அற்றவனான இறையை, இருள்சேர் இருவினையம் சேரா உலகமான பரமபதத்தில் சென்று வாழ்த்தி மகிழ்வதே வீடு பேறு  என்கிறது குறள் ஐந்து.

6. ஆக, இறைவனை நினைத்தல், வாழ்த்தல், அவன்நெறி நிற்றல் இவை செய்வார் , பொய்யில் மெய்வாழ்க்கையாகிற - மறுபடி பிறத்தலில்லா- மேல்வீட்டின்கண் நிலையாக நீடு வாழ்வார் என்கிறது 6 வது குறள் .

7. அஃதிலார் , காம, வெகுளி மயக்குளாகிற துன்பக் கடலுக்கு ஹேதுவாகிரா பிறவிக்கடலில் அழுந்துவர் என்று அன்வய முகேண  7 வது குறளிலும்  

8. இதையே எதிர்மறையாக - வியதிரேகத்தில் -  கருத்தாளுமை தோற்ற, அறத்தின்பால் அலாத பொருள், இன்பம் இவைமேல் கண்வைப்பார்க்கு பிறவிக்கடல் நீந்துதல் அரிதாம் என்கிறது குறள் எட்டு.       

9. முக்கரணங்களைப் படைத்த இறைவனை நினைத்தல், வாழ்த்தல், வணங்கல் அதுசெய்யார் தலையால், கண், செவி, நாக்கால் என்ன பயனும் இல. ''பூர்வ மேவ கிருதா பிரம்ஹன்னு ஹஸ்த பாதாதி சம்யுதம் ,  ஈஸ்வராய நிவேதித்தும்'' என்கிற வடமொழி வாசகத்தின் திரண்ட கருத்தை - கூறவதே 9 வது குறள் .

10. முடிவாக, இகல் ஒழித்து வீடு புகல் , தன்னால் அன்றி இறைவன் தாள் கொண்டு . அதுவும் அவனதின்னருள் என்பதே கடவுள் வாழ்த்துப் பகுதியின் முடிவான குறளின் திரண்ட பொருளாகும்.
  
இப்படி, வள்ளுவர் மோக்ஷ சாதனமாக குறிப்பிடுவது, சரண்யனுடைய திருவடிகளையே என்பது இங்கு தெளிவான பதிவு.  இதனையே ஸ்வாமி பிள்ளைலோகாவிகாரியர் என்கிற வைஷ்ணவ ஆசிரியரும் ''ஸ்தனந்தய பிரஜையானது மாதாவின் எல்லா அவயவங்களும் இருக்க, அவள் முலையிலே வாய் வைக்குமா போலே'' என்கிறார்.

இவை பத்தும் 'பிறவி நோய் அறுக்குமே' என்கிற வகையில் பாடப்பெற்ற ''கடவுள் வாழ்த்துப்'' பகுதியைக் கொண்டு, வள்ளுவர் வைஷ்ணவ கோட்பாடுகளையே கொண்டிருந்தார் என்று உறுதியாகவே கூறலாம். இதை மேலும் விவரிப்போமாக :-

இவர் இறைவனை ''ஆதி பகவன்'', ''வாலறிவன்'', ''அறவாழி அந்தணன்'' என்பதால் முண்டிகள் தங்களுடைய கடவுளான ''புத்தனைத்தான் '' பேசுகிறார் என்பர்.  

''மலர்மிசை ஏகினான்'' என்பதைக் கொண்டு  சமணர்கள் தங்களுடைய கடவுளான    ''அருகனைத்தான்''  குறிப்பிடுகிறார் வள்ளுவர் என்பர்.

உண்மையில் அவர் வைதிக நெறியைச் சார்ந்தவர் என்பதிலேயே பொருள் உள்ளது. காரணம் :

அவர் தாள், அடி, நற்றாள் , மாணடி என்று உருவ வழிபாட்டு கடவுளரையே பாடி உள்ளார். இந்த வழிபாட்டு முறை மேற்சொன்ன மதங்களில் இல்லை யாதலால் இங்கு அவர்களுடையதான  சூன்யவாதம், மாயாவாதம், நிரீஸ்வர சாங்கிய வாதம் அத்தனையும் மறுக்கப் பட்டதாகவே தேறுகிறது . மேலும் 

''வேண்டுதல் வேண்டாமை இலான்'' (அவாப்த சமஸ்த்த காமத்வம்)
''இருவினையும் சேரா  இறைவன்'' (கர்ம-பல அசம்ஸ்பிருஷ்டன், ஹேய குண பிரதிபடன்)
''பொறிவாழ்வில் ஐந்தவித்தான்'' (ஹ்ருஷீக ஈசன்) 
''தனக்குவமை இலாதான்'' (அப்ரதிம பிரபாவன்)
''அறவாழி அந்தணன்'' (விக்ரஹவான் தர்ம:, வேத நான்கும் முன்போதிய பட்டன்)
''எண்குணத்தான்'' (அஷ்டகுண ஸம்பன்னன்)
என்பதான பிரபாவங்களை உடைய வைதிக மத முழுமுதற் கடவுளான நாராயணனே இங்கு விவக்ஷிதம்.

நாரஸ்ய அயனம், நாராணாம் அயனம் என்கிற வியுத்பத்தியின் படி உள்ளும் புறமும் இருந்து ஆட்சி செய்வதால் நாராயணனே இறை (ஆளுமை உடையவன் )  என்பதான பிரஹ்ம விவர்தன வாதத்தை ஏற்குமுகமாக வள்ளுவரும் ''இறைவனை'' க் கொண்டு  இந்த அதிகாரத்தை முடித்திருப் பதால், குணபூர்த்தி உள்ள பிரமத்தையே வழிபாட்டுக்கு குறிய தெய்வமாக அவர் அனுமோதிக்கிறார் என்பதும் புலனாகிறது.

தவிர முதல் குறளில் உள்ள 

''பகவன்'' என்பது 'பகவான்' என்றவடமொழி சொல்லின் குறைப்பாகும். உலகம் அருவம் (சூக்ஷுமம்) உருவம் (ஸ்தூலம்) என பலவாய் , உயிர்கள் ஆண், பெண் என்றும், நடப்பன, ஊர்வன, மிதப்பன, பறப்பன எனவாய்  இறைவன் தானே - பகுஸ்யாம் பிரஜா யே இதி-என்று வேதத்தில் ஓதின படி- பலவாதலால் அவருடைய  'பகவன்' என்பதும்  காரணப் பெயரால் வந்தது எனலாம் . இது ஸ்ரீ வைஷ்ணவ ஸத்கார்ய வாதத்தை ஏற்றுச் சொன்ன ஒன்றாகும்.

இதனால், இறைவன் என்கிற காரணி இன்றி , பரிணாம வளர்ச்சியால் உலகம் உண்டாகிறது என்கிற வைசேஷிக மதமாகிற ''அணுப்பரிணாம வாதம்'' மறுக்கப் பட்டது என்று கூறலாம்.

வடமொழியில் பகவான் என்பவன்  ஞான, பல, ஐஸ்வர்ய, வீர்ய, சக்தி, தேஜ: என்கிற ஷாட்குண ஸம்பன்னனாக அறியப்படுகிறான். இதை தமிழில் ஓதி, செல்வம், மறம், புகழ், திரு, அவாவின்மை என்று கூறுவதுண்டு.  இப்படிப் பட்ட குண விசிஷ்ட பிரமத்தையே வள்ளுவர் ''பகவன்'' என்று பேசியுள்ள படியால்,  நிர்குண, நிராகார பிரஹ்ம வாதிகளான ''மாயா'' வாதத்தை திரஸ்கரித்த படியையும் காட்டுகிறது.

படைத்தல், காத்தல், கரத்தல் ஆகிய மும்மூர்த்திகளையும் பகவான் என்பது போக, பகவன் என்று பௌத்த கடவுளாகவும், அருகன் என்று ஜைனமதக் கடவுளாகவும் வழக்கில் உள்ளபடியால், அவர்களை வியாவர்த்திக்க வேண்டி  ''ஆதிபகவன்'' என்று விசேஷணத் தோடே குறிப்பிடுகிறார் தம்முடைய '' முழுமுதற் கடவுளான '' பகவானை  வள்ளுவர்.

''அகாரார்த்தோ விஷ்ணுஹு'' என்கிற  வடமொழி வசனத்தை அடியொற்றி ''அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவான் முதற்று'' என்கிறார் இவரும். உபமானம், உபமேயம் இரண்டிலும் இந்த ''ஆதி'' சப்தத்தை அன்வயித்து பொருள் கொள்ள வேண்டும்படியாய் வள்ளுவர் தம்முடைய முதல் குறளை அமைத்தது நோக்கத் தக்கது.
அகரம் சப்த ராசிகளுக்குள் ஆதி என்று வைத்து பார்க்கும்போது ''முதல்'' என்ற பொருளிலும் , மெய் எழுத்துக்களுக்கு காரணியாக இருப்பதையும் கொண்டு.
ஆதி+பகவன் என்று பார்க்கும் போது ஜகத் காரணத்வத்வம்  மட்டுமல்லாது , புத்த, சமணக் கடவுளரான தேவதாந்தரங்களை வியாவர்த்திப் பதிலே அவருக்கு முக்கிய நோக்கு என்று சொல்லலாம்.  

எப்படி ம்ருக்பிண்டம் கடமாய் இருந்தாலும், கபாலமாய் இருந்தாலும், உடைந்து சூர்ணமானாலும் -  கார்யாவஸ்த்தையில்  அது வேறுபட்டாலும் - காரண அவஸ்தையில் அவை  மண் என்றே இருக்குமா போலே, ஸ்ருட்டித்த ஜகத்துக்கு ஆதி (காரணம்) பகவான். ஸ்ப்த ராசிகளுக்கு ஆதி (முதல்) அகாரம். அத்தால் சப்தங்களுக்கு ஆதியான அகாரத்தால் சொல்லப்படும் பகவான்-விஷ்ணு- பிரக்கிருதி , ப்ராகிருத்தங்களுக்கு காரண பூதன் என்கிற ஸத்காரண வாதத்தை  முன்னிலைப் படுத்துகிற வள்ளுவரை வைஷ்ணவர் என்பதில் என்ன குறை?

இறைவன் அடியே துணையாய் துறைசேர்
மறையின் பொருளாம் குறள்!

இவையே வள்ளுவரின் கடவுள் கொள்கை .

எனவே அவர் வைதிக மரபில் - சனாதன பரம்பரையில் - வந்தவர் , சமணரோ, பௌத்தரோ அல்லர் என்பதைச் சொல்லி,

எப்படி கர்ம, ஞான, பக்தி யோகங்களை பரக்கப் பேசி, பின் அவைகளைக் கழித்து சரணாகதி சாஸ்திரத்தை சரம ஸ்லோகத்திலே கீதாச்சாரியன் கௌரவித்தானோ, அதுபோல அறத்துப் பால், பொருட் பால், காமத்துப் பால் என்று 1320 குறள்களில் விசத்தமாக லௌகீக விஷயங்கள் பேசினாலும், கடவுள் வாழ்த்து 10 பாடல்களால், சரணாகதியே மோக்ஷ சாதனமாக சிலாகித்த திருக்குறளை ஸ்ரீவைஷ்ணவ நீதி நூலாக ஏற்பதில் குறை ஒன்றும் வாராது.

--கி ஸ்ரீர ஸ்ரீ .  


K S Srinivasan


---------- Forwarded message ---------
From: Thiruvonum's Weblog <comment-reply@wordpress.com>
Date: Wed, 29 Dec 2021 at 16:59
Subject: [New post] ஸ்ரீ திருக்குறளும் ஸநாதன தர்மமும் –ஸ்ரீ சுஜாதா தேசிகன் ஸ்வாமிகள் —
To: <kairavini@gmail.com>


Respond to this post by replying above this line

New post on Thiruvonum's Weblog

ஸ்ரீ திருக்குறளும் ஸநாதன தர்மமும் –ஸ்ரீ சுஜாதா தேசிகன் ஸ்வாமிகள் —

by thiruvonum

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு

என்று ‘அ’வில் ஆரம்பிக்கிறார் வள்ளுவர். எழுத்துக்கு எல்லாம் எப்படி ’அ’ முதலோ அது போல
நாராயணன் எல்லாவற்றிற்கும் மூலம் என்கிறார். பகவான் என்று தானே கூறுகிறார்
இங்கே நாராயணன் இல்லையே என்று யோசிக்கலாம்.

கோயில் என்றால் அது ஸ்ரீரங்கம் மாதிரி பகவான் என்றால் அது ஸ்ரீமந் நாராயணனையே குறிக்கும்.
கீதையில் ‘கிருஷ்ணர் சொன்னார் என்று சொல்லாமல் ‘ஸ்ரீ பகவான் உவாச’ என்று பகவான் சப்தம்
இங்கே கண்ணனான நாராயணனையே குறிக்கிறது. கண்ணன் சம்பந்தப்பட்டதால் ‘ஸ்ரீமத் பாகவதம்’ என்று கூறுகிறோம்.
கண்ணின் பக்தர்களை ’பாகவதர்கள்’ என்கிறோம். இன்று பல பகவான்கள் முளைத்துவிட்டபடியால் மக்கள் குழம்பிவிடுவார்கள்
அதனால் ’ஆதி பகவன்’ என்கிறார் வள்ளுவர்.

செய்யக்கூடிய செயல்களைச் செய்வது தான் அறம் என்கிறார் வள்ளுவர்.
பரிமேலழகர் ’இம்மை மறுமை வீடு’ என்னும் மூன்றுக்கும் பயன் தருவது அறன் என்கிறார்.

செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி

ஒருவனுக்குச் செய்யக்கூடிய செயல்களே அறம்; செய்யக் கூடாத செயல்கள் பழியே.
எது செய்யக் கூடிய செயல்கள் நம் முன்னோர்கள் எதைச் செய்தார்களோ அதைக் கடைப்பிடிப்பதே அறம்
( மேலையார் செய்வனகள் என்று ஆண்டாள் 26ஆம் பாசுரத்தில் கூறுகிறாள்).

வள்ளுவர் இந்த அறவழிக்கு அறத்துப்பால் என்ற பகுதியையே ஒதுக்கி,
அதில் ’அறன் வலியுறுத்தல்’ என்று ஓர் அதிகாரமே தந்துள்ளார்.
அதில் அறம் என்றால் என்ன பல விதங்களில் கூறியுள்ளார்.

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன்
ஆகுல நீர பிற

மனதில் அழுக்கு இல்லாமல் இருக்க வேண்டும் ; அறம் அவ்வளவு தான். மற்றவை ஆரவாரம் என்கிறார்.

இன்னொரு குறளில்

அழுக்காறு அவா வெகுளி இன்னாச் சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்

பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் ஆகிய இந்த நான்கு குற்றங்களுக்கும்
இடங்கொடுக்காமல் வாழ்வதே அறமாகும் என்கிறார்.

‘தீக்குறளை சென்று ஓதோம்’ என்பதற்கு வள்ளுவர் ‘புறங்கூறாமை’ என்று ஒரு முழு அதிகாரத்தையே ஒதுக்கியுள்ளார்.
ஒருவன் அறநெறியை விட்டுவிட்டு பாவங்களையே செய்துகொண்டு இருந்தாலும்,
அவன் புறம் பேசாமல் இருந்தாலே போதும். புறம் பேசுதல் எல்லாப் பாவங்களைவிடக் கொடியது.

புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
அறங்கூற்றும் ஆக்கத் தரும்.

புறம் பேசாமல் இறந்தால், மறுபிறப்பில் அறநெறியில் வாழ்ந்தவர் பெறும் பலனைப் பெறுவார்.
மாசு படிந்த மனம் தான் கோள் சொல்லும், நண்பர்களை இழப்பார்கள் என்று அடுக்கிக்கொண்டு போகும் வள்ளுவர்

அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப்
புன்சொல் உரைப்பான் பொறை.

புறம் கூறுபவர்களை இந்தப் பூமி ’இவனை எல்லாம் சுமக்க வேண்டியிருக்கிறதே’ என்று
தன் தர்மத்தைக் காக்கவே சுமக்கிறது.

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.

அதாவது பற்றில்லாதவனாகிய பெருமாளின் பற்றை மட்டுமே பற்றிக் கொள்ள வேண்டும்;
மற்ற பற்றுக்களை விட்டொழிப்பதற்கே அப்பற்றைப் பற்ற வேண்டும்.
பற்றற்றான் என்பது பகவானைக் குறிக்கும். நம்மாழ்வார் ‘பற்றிலன் ஈசன்’ என்கிறார்.

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை

இல்லறத்தில் வாழ்பவன் அறவழியில் தவசி, பிரமச்சாரி, துறவியாகிய மூவருக்கும்
அவர்களுக்கு ஏற்ற உதவிகளை செய்து துணையாக இருப்பான்

திருவள்ளுவமாலையில் ‘பரணர்’ என்ற புலவர் பாடிய பாடல் இது.

மாலும் குறளாய் வளர்ந்திரண்டு மாணடியால்
ஞாலம் முழுவதும் நயந்தளத்தான் – வாலறிவின்
வள்ளுவரும் தங்குறள்வெண் பாவடியால் வையத்தார்
உள்ளுவவெல் லாமளந்தார் ஒர்ந்து.

திருமால் குறளாய் தோன்றி இரு பேரடியால் உலகனைத்தையும் அளந்தான்;
திருவள்ளுவர் தம் குறளின் இரு சிற்றடியால் மக்களின் எண்ணங்கள் எல்லாவற்றையும் அளந்தார் என்கிறார் புலவர்.

வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல

விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை இடைவிடாது சிந்திப்பவர்களுக்கு
எந்தக் காலத்திலும் துன்பம் இல்லை

மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅயது எல்லாம் ஒருங்கு

தன் அடியால் எல்லா உலகையும் அளந்த திருமால் நடந்த பரப்பு முழுவதையும்
சோம்பல் இல்லாத அரசன் அடைவான் என்கிறார். நல்லாட்சி செய்தால் அவனுக்கு
மூவுலகங்களையும் அளந்த திருமால் போன்ற எல்லாம் கிடைக்கும்.

ஆனால் நல்லாட்சி புரியவில்லை என்றால் ? வள்ளுவர் இப்படி விவரிக்கிறார்

முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஒல்லாது வானம் பெயல்

அரசன் முறைதவறி நாட்டை ஆட்சி செய்வானானால், அந்த நாட்டில் பருவ மழை பொய்க்கும்
என்று கூறிவிட்டு இன்னொரு குறளில்

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்

நாட்டைக் காக்கும் அரசன் முறைப்படி காக்காவிட்டால் அந்நாட்டில் பசுக்கள் பால் குறையும்.
அந்தணர்கள் அறநூலாகிய வேதங்களை மறந்துவிடுவார்கள் என்கிறார்.

--------

நெடுங்கடலும் தன் நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்

மேகம் கடலிலிருந்து முகந்த நீரை மீண்டும் கடலிலே பெய்யாமல் போனால், நீண்ட பெரிய கடலும்
தன் வளம் குன்றிப் போகும் என்கிறார் வள்ளுவர். அதாவது திருப்பதிக்கே லட்டு என்பது போல கடலுக்கே மழை தேவை என்கிறார்.
அதுவும் அந்த மழை ‘தடிந்தெழிலி’ பொழிய வேண்டும் என்கிறார் முனிவர்.

’தடிந்தெழிலி’ - தடிந்து எழிலி என்றால் மேகமானது மின் வெட்டி இடி இடித்துப் பெருமழை பெய்வது குறிக்கும்.
மின்னலும் இடியுமாக ‘cloud-burst’ மழை பெய்ய வேண்டும் என்பதைத் தான் ‘ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து*
தாழாதே சார்ங்க முதைத்த சரமழைபோல்’ என்கிறாள். வள்ளுவர் இதை ‘தடிந்து எழிலி’ என்கிறார்.

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.

உண்பவர்க்குத் தக்க உணவுப் பொருள்களை விளைவித்துத் தருவதோடு,
பருகுவார்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும்.

விண் இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள் நின்று உடற்றும் பசி.

மழை பெய்யாமல் இருந்தால், கடல் சூழ்ந்த அகன்ற உலகமாக இருந்தும் பசி உள்ளே நிலைத்து நின்று
உயிர்களை வருத்தும் என்கிறார்.

இந்த அதிகாரத்தின் சுருக்கம் - விவசாயம் செய்ய, குடிக்க, பசிக் கொடுமை போக்க மழை அவசியம்.
அதுவே அமுதம். தானம், தவம், கோயில் பூஜை, எல்லாம் மழை இல்லை என்றால் நின்று போகும்.
மழை இல்லை என்றால் பசும் புல்லைக் கூடப் பார்க்க முடியாது
மொத்தத்தில் மழை இல்லை என்றால் உலக வாழ்க்கை நடைபெறாது என்கிறார்.
இதைத் தான் ஆண்டாள் ‘வாழ உலகினில் தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்திடாய்’ என்று
‘நல்ல மழையை’ வேண்டும் என்று பிராந்தனைச் செய்கிறாள்..

வள்ளுவர் நல்ல மழை, கெட்ட மழை என்று இரண்டையும் சொல்லியிருக்கிறார்.

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற்று ஆங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.

பெய்யாதும் மிகுதியாகப் பெய்தும் மக்களை கெடுப்பதும், அளவாய்ப் பெய்து வாழ வைக்க செய்ய வல்லமையுடையது மழை.

அந்த ’கெட்ட மழை’ தான் கண்ணன் ‘குன்றம் ஏந்திக் குளிர்மழை காத்தான்!’

---------

காட்சிக்கு எளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம்

பார்வைக்கு எளிமை, சொல்லுக்கு இனிமை உடைய மன்னனை நாடு புகழும்

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன்
ஆகுல நீர பிற

அதாவது ஒருவன் தன் மனத்தில் மாசு இல்லாதவனாக இருக்க வேண்டும்; அறம் அவ்வளவே;
மனத்தூய்மை இல்லாத மற்றவை வெறும் ஆரவாரம் என்கிறார்

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்

பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் ஆகிய இந்த நான்கு குற்றங்களுக்கும் இடங்கொடுக்காமல்
அவற்றைக் கடிந்து ஒழுகுவதே அறமாகும்.

சிறைகாக்கும் காப்புஎவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை

புற நிர்ப்பந்தங்களில் உண்டாகும் சுத்தம் கற்பாகாது; தன் உள்ளத் தூய்மையால் அடையும் சுத்தமே கற்பு.

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்
பிறவாழி நீந்தல் அரிது

அறக்கடலாக விளங்கும் பெருமாளின் திருவடியை நினைந்தாலன்றிப் பாவக்கடலைக் கடக்கமுடியாது என்கிறார்.

செவியை ஒரு ஹோமம் செய்யும் குண்டமாக வைத்து அக்கினியில் சொரியும் அவியைப் போன்றது,
பெரியோர் சீடர்களுக்கு அவர்களுடைய செவி மூலம் தரும் அறிவு என்கிறார் வள்ளுவர்

செவியுணவின் கேள்வி உடையார் அவியுணவின்
ஆன்றாரோடு ஒப்பர் நிலத்து

ஆசாரியன் ஒரு பெரிய வேள்வியைச் செய்யும் பயனை அடைவான்;
அவியப் பெற்றுத் திருப்தியடையும் தேவர்களைப் போல் ஆவான் அறிவை பெறும் சீடன்.

தவம்மறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து
வேட்டுவன் புள்சிமிழ்த்து அற்று

தவக்கோலத்தில் மறைந்துகொண்டு தீய செயல்களைச் செய்தல், புதரில் மறைந்து வேடன்
பறவைகளை வலைவீசிப் பிடித்தலைப் போன்றது.

காக்கை கரவா கரைந்துஉண்ணும் ஆக்கமும்
அன்னநீ ரார்க்கே உள

தனக்குக் கிடைத்ததை காக்கை மறைத்துவைக்காமல் சுற்றத்தைக் கூவி அழைத்து உண்ணும்;
இப்படிப்பட்ட இயல்புடையவருக்கே செல்வம் பெருகும் என்கிறார்.

உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து
அலகையா வைக்கப் படும்

உலகம் கூறும் உண்மையை மறுப்பவன் பேயாகக் கருதப் படுவான் என்கிறார்-

கேட்பினும் கேளாத் தகையவே கேள்வியால்
தோட்கப் படாத செவி.

கேள்வி அறிவால் துளைக்கப்படாத செவிகள் ஓசையைக் கேட்டு என்ன பிரயோஜனம் ? என்று என்கிறார் வள்ளுவர்.

அருள் என்றால் என்ன ?
வள்ளுவர் அருளுடைமை என்று ஓர் அதிகாரத்தையே இதற்கு ஒதுக்கியுள்ளார்.

அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள

செல்வங்கள் பலவற்றுள்ளும் ஆராய்ந்தெடுக்கப்பட்ட செல்வமாவது அருளால் வரும் செல்வம்.
மற்ற செல்வங்கள் சிறப்பு இல்லை என்கிறார் வள்ளுவர்

அருள்இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருள்இலார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு

பொருள் இல்லாதவர்க்கு இவ்வுலகத்து வாழ்வு இல்லை என்பது போலப் போல அருளில்லாதார்க்கு அவ்வுலகம் இல்லை.

பிணியின்மை செல்வம் விளைவுஇன்பம் ஏமம்
அணிஎன்ப நாட்டிற்கிவ் வைந்து

நோயின்மை, செல்வம், விளைச்சல், இன்பம், காவல் இவை ஐந்தும் நாட்டுக்கு அணிகலங்கள் என்கிறார்.
இங்கே ஏமம் = காவல்.

நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம்
யாநலத்து உள்ளதூஉம் அன்று

நாவன்மையாகிய நலம் ஒருவகைச் செல்வம் ஆகும்; அந்த நாநலம் தனிச்சிறப்புடையது.
ஆகையால் மற்ற எந்த நலங்களிலும் அடங்குவது அன்று என்கிறார்.
இந்தச் செல்வம் அனுமாரிடம் இருந்தால் தான் அனுமாருக்குச் சொல்லின் செல்வர் என்ற திருநாமம்.

உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து

உருளும் பெரிய தேர்க்கு அச்சிலிருந்து தாங்கும் சிறிய ஆணி போன்றவர்கள் உலகத்தில் உள்ளனர்.
அவர்களுடைய உருவின் சிறுமையைக் கண்டு இகழக் கூடாது என்கிறார்.

ஸ்ரீராம தூதன் என்ற பெயரும் அனுமாருக்கு உண்டு. ஒரு தூதுவன் எப்படி இருக்க வேண்டும் என்று வள்ளுவர் கூறுகிறார்.

அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு
இன்றி யமையாத மூன்று

அன்பு, அறிவு, ஆராய்ந்து சொல்கின்ற சொல்வன்மை ஆகிய இவை தூது உரைப்பவர்க்கு
இன்றியமையாத மூன்று பண்புகளாகும் என்கிறார் வள்ளுவர்

வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற்று எல்லாம்
குறிஎதிர்ப்பை நீரது உடைத்து

ஏழைகளுக்கு ஒரு பொருளைக் கொடுப்பதே ஈகை எனப்படுவது. மற்றவர்க்குக் கொடுப்பதெல்லாம் பயனை
எதிர்பார்த்துக் கொடுக்கும் தன்மை உடையது. வெளிப்படையாகத் தெரியாவிட்டாலும், நோக்கம் அதுவே என்கிறார்.

பொருளென்னும் பொய்யா விளக்கம் இருள்அறுக்கும்
எண்ணிய தேயத்துச் சென்று

பொருள் என்று சொல்லப்படுகின்ற நந்தாவிளக்கு, நினைத்த இடத்திற்குச் சென்று உள்ள இடையூற்றைக் கெடுக்கும்.

எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு.

புறத்தின் இருளைப் போக்கும் விளக்குகள் எல்லாம் விளக்குகள் அல்ல. சான்றோர்க்கு அகத்தின் இருளைப் போக்கும்
பொய்யாமையாகிய விளக்கே விளக்கு ஆகும் என்கிறார்.

கடலன்ன காமம் உழந்தும் மடல்ஏறாப்
பெண்ணின் பெருந்தக்கது இல்

கடலைப் போன்ற காம நோயால் வருத்தமடைந்த போதும், மடலேறாமல், அதைப் பொறுத்துக் கொள்ளும்
பெண்மையினும் மேம்பட்டது வேறொன்றும் இல்லை என்கிறார்.

செருக்கும் சினமும் சிறுமையும் இல்லார்
பெருக்கம் பெருமித நீர்த்து

செருக்கும் சினமும் சிறுமையும் ஆகிய இந்தக் குற்றங்கள் இல்லாதவருடைய வாழ்வில்
காணும் பெருக்கம் மேம்பாடு உடையதாகும் என்கிறார். இன்னொரு குறளில்

பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற

பணிவும் இன்சொல்லுமே அணிகலனாகும், மற்றைய அணிகலங்கள் ஆகாது என்கிறார்.

வெண்மை எனப்படுவது யாதெனின் ஒண்மை
உடையம்யாம் என்னும் செருக்கு

`எனக்கு அறிவு இருக்கிறது` என்று ஒருவன் தன்னைத்தானே மதித்துக் கொள்ளும் செருக்காகும்

எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து

பணிவுடன் இருந்தால் எல்லோர்க்கும் நல்லதாகும்; அவர்களுக்கு மற்றொரு செல்வம் போன்றதாகும்.

உயர்ந்த குலம் என்பதற்கு வள்ளுவர் கூறும் definition கீழே உள்ள குறள்

நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம்வேண்டின்
வேண்டுக யார்க்கும் பணிவு

தனக்கு நலம் வேண்டுமானால் தீயன செய்ய அஞ்சவேண்டும்; குலப்பெருமை வேண்டுமானால்
யார்க்கும் பணிவு விரும்புக என்பது குறளின் பொருள். பணிவே ஒருவனுக்கு அணிகலன் என்கிறார்.

படைகுடி கூழ்அமைச்சு நட்புஅரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு

படை, குடிமக்கள், பொருள், அமைச்சரவை, நட்பு நாடுகள், பாதுகாவல் என்ற
ஆறு உறுப்புக்களையும் உடையவன் அரசருள் ஆண் சிங்கம் போன்றவன் என்கிறார்.

ஆண் சிங்கத்தின் நடை அழகை வள்ளுவர் இப்படிக் கூறுகிறார்

புகழ்புரிந்த இல்இலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை

அதாவது புகழைக் காக்க விரும்பும் மனைவியைப் பெற்றவருக்கு இகழ்ந்து பேசும் பகைவர் முன்
ஆண்சிங்கம் போல் பெருமிதத்துடன் நடக்க முடியும் என்கிறார்.

ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்
பேர்த்துள்ள வேண்டாப் பிறப்பு

சிந்தித்துத் தெளிந்து மெய்ப்பொருளை உள்ளம் உணர்ந்து கொண்டால்,
உறுதியாக, மனிதப் பிறப்பின் இயல்பை மீண்டும் ஆராயவேண்டியதில்லை என்கிறார்.

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது

எவ்வகையாலும் ஒப்புமை இல்லாதவனின் திருவடியை இடையறாது நினைப்பவர்க்கு
மனக்கவலையை இல்லை என்கிறார் வள்ளுவர்.

பெரியவர்கள் யார் என்று வள்ளுவர் கூறியிருக்கிறார்

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்

செய்வதற்கு அரிய செயல்களைச் செய்பவர்கள் பெரியர்;
அரிய செயல்களைச் செய்ய இயலாதோர் சிறியர் என்கிறார்

பெரியர் என்பவர்கள் செயல்களை உரிய நெறியில் செய்து முடிக்க வல்லவர்கள் என்று
இன்னொரு குறளில் அதற்கு விளக்கம் தருகிறார்.

வள்ளுவர் மேலும் ஒரு குறளில்

சூழ்வார் கண் ஆக ஒழுகலான் மன்னவன்
சூழ்வாரைச் சூழ்ந்து கொளல்

பெரியவர்கள் கண்கள் போன்றவர்கள். அரசனும் அவர்களைப் பின்பற்ற வேண்டும் என்று கூறுகிறார்.

இடிக்கும் துணையாரை ஆள்வாரை யாரே
கெடுக்கும் தகைமை யவர்

தப்பு செய்தால் இடித்து அறிவுரை கூறும் பெரியவர்களின் துணை கொண்டவர்களை யாரும் தப்பான வழியில்
போகும்படி கெடுக்க முடியாது என்று கூறிய வள்ளுவர் இன்னொரு குறளில்

முதலிலார்க்கு ஊதியம் இல்லை மதலையாம்
சார்பிலார்க்கு இல்லை நிலை

வியாபாரத்தில் முதல் இல்லாமல் லாபம் பார்க்க முடியாது.
அது போலப் பெரியவர்களின் துணை இல்லாமல் நல்ல நிலைக்குச் செல்ல முடியாது என்கிறார்.

நாம் பித்ருக்களுக்கு மறவாமல் சடங்குகள் செய்ய வேண்டும் என்பதை வள்ளுவர்

தென் புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை

தென் புலத்தார் என்பது பித்ருக்கள். இறந்தவர்களை மறவாமல் சில சடங்குகள் செய்து
நினைவில் வைத்துக்கொள்வது நலம் என்கிறார்.

கோளில் பொறியிற் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை--வள்ளுவர் ஒரு குறளில்--

கேட்காத செவி பார்க்காத கண் முதலியனபோல் எண் குணங்களை உடைய
கடவுளின் திருவடிகளை வணங்காதவரின் தலைகள் பயனற்றவைகளாம்.

இந்தக் குறள் கடவுள் வாழ்த்தில் ஒன்பதாவது குறள்.
இதற்கு முன் எட்டுக் குறளில் வள்ளுவர் கூறும் பெருமாளின் எட்டுக் குணங்கள் இவை.

1. ஆதி பகவன் - அவனே எல்லாவற்றிற்கும் முதலானவன்
2. வாலறிவன் - தூய்மையாகிய அறிவுடையவன்
3. மலர்மிசை ஏகினான் - மலரின் கண்ணே
4. வேண்டுதல் வேண்டாமை இலான் - விருப்பு/வெறுப்பு அற்றவன்
5. இரு வினையும் சேரா இறைவன் - பாவ புண்ணியம் அற்றவன்.
6. பொறி வாயில் ஐந்தவித்தான் - புலன்களை வென்றவன் - இருடிகேசன்
7. தனக்குவமை இல்லாதான் - ஒப்புமை இல்லாதவன்
8. அறவாழி அந்தணன் - அவனே அறக்கடல்

பெருமாளுக்கு உள்ள எட்டுக் குணங்களைக் குலசேகர ஆழ்வார் தனது முகுந்த மாலையில் இப்படிக் கூறுகிறார்.

ஸ்ரீ வல்லபேதி வரதேதி தயாபரேதி
ப்க்த ப்ரியேதி பவலுண்டன கோவிதேதி
நாதேதி நாக சயனேதி ஜகன் நிவாஸே
த்யாலாபினம் ப்ரதிபதம் குரு மே முகுந்த

1. ஸ்ரீ வல்லபேதி(திருமகள் நாயகனே)
2. வரதேதி ( வரமளிப்பவனே)
3. தயாபரேதி (கருணைமிக்கவனே)
4. பக்த பரியோதி(பக்தர்களின் அன்பனே)
5. பவலுண்டன கோவிதேதி (பிறவித் தொடரை களைந்து காக்கும்)
6. நாதேதி(வல்லவனே)
7. நாக சயனேதி(பாம்பணையில் துயில்பவனே)
8. ஜகன் நிவாஸே( எங்கும் நிறைந்தவனே)

ராமா நீ
1. அளவிடமுடியாத தன்மை உடையவர்.
2. யாராலும் வீழ்த்த முடியாதவன்
3. புலன்களை வென்றவர்
4. நீயே தர்மம்
5. பெருமைமிக்கவன்
6. முக்காலமும் அறிந்தவர்
7. பொறுமைமிக்கவர்
8. செந்தாமரைக் கண்ணழகை உடையவன்.
தாரை கூறும் எட்டுக் குணங்கள் இவை.

வெண்மை எனப்படுவது யாதெனின் ஒண்மை
உடையம்யாம் என்னும் செருக்கு

எனக்கு அறிவு இருக்கிறது` என்று ஒருவன் தன்னைத்தானே மதித்துக் கொள்ளும் செருக்காகும் என்று
கூறிய வள்ளுவர் செருக்கு இல்லாமல் இல்லாமல் இருந்தாலே பெரிய செல்வம் என்கிறார்

அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின்
குற்றம் மறையா வழி

தம்மிடத்தில் உள்ள குற்றத்தை அறிந்து நீக்காத போது, உடம்பில் மறைப்பதற்குரிய பகுதியை
மட்டும் ஆடையால் மறைத்து என்ன பயன் ?

நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை

நிலையில்லாதவற்றை நிலையானது என்று நினைப்பது தான் அற்பத்திலும் அற்பம் என்கிறார்.

நம் உடலுக்கும் உயிருக்கும் உள்ள தொடர்பு முட்டை உடைந்து பறவை பறந்து போவது போல என்பதைக்

குடம்பை தனித்து ஒழியப் புள்பறந் தற்றே
உடம்போடு உயிரிடை நட்பு

என்று கூறும் வள்ளுவர் இந்த உடலுக்கு ஏற்ற இடம் பற்றி இப்படிக் கூறுகிறார்.

புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு.

நோய்களுக்கு இடமாகிய உடம்பில் ஒரு மூலையில் குடியிருந்த உயிர்க்கு,
நிலையாகப் புகுந்திருக்கும் வீடு இதுவரையில் அமையவில்லையோ?

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.

கடவுளின் திருவடியை இடைவிடாது நினைப்பவர் மோட்சம் பெறுவார். இன்னொரு குறளில்

பிறவிப் பெருங் கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடி சேராதார்

இறைவனுடைய திருவடிகளை நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும்;
மற்றவர் கடக்க முடியாது.

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.--

இக் குறள் அப்படியே கீதையின் சரம ஸ்லோகம்!
பற்றில்லாதவனாகிய கடவுளுடைய பற்றை மட்டும் பற்றிக் கொள்ள;
உள்ள பற்றுக்களை விட்டொழிப்பதற்கே அப்பற்றைப் பற்ற வேண்டும்.

பொறி வாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்

பொறி வாயில் ஐந்து அவித்தான் - மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்தையும்
தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவன் என்று பொருள் -
அதனால் தான் பெருமாளை ‘ரிஷிகேசன்’ என்கிறோம்.. தமிழில் இருடீகேசன்.
பொய் தீர் ஒழுக்க நெறி நின்றார் -. பொய்த்தல் என்றால் மறைத்தல் என்று பொருள்.
இங்கே ஒரு நெறியை மறைக்காமல் காட்டியிருக்கிறார். அந்த ரிஷிகேசன் ஓர் ஒழுக்க நெறியை மறைக்காமல் காட்டியிருக்கிறான்.
நீடு வாழ்வார் - அந்த நெறியை பின் பற்றியவர்கள் பிறப்பு இன்றி எக்காலத்தும் வாழ்வார் என்கிறார் வள்ளுவர்.
அந்த நெறி தான் சரம ஸ்லோகம்!

வலிஇல் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று

மனத்தை அடக்கும் வல்லமை இல்லாதவன் வெளியே வலிமையான தோற்றம் பெற்றிருந்தாலும்,
புலித்தோல் போர்த்தி மேயும் பசுக்கள் போல என்கிறார்.

---------------------------------------------------

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ சுஜாதா தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ திரு வள்ளுவர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

thiruvonum | December 30, 2021 at 12:59 am | Categories: Sri Vaishna Concepts | URL: https://wp.me/p6r11-Bmo

Comment   See all comments   Like

Unsubscribe to no longer receive posts from Thiruvonum's Weblog.
Change your email settings at Manage Subscriptions.

Trouble clicking? Copy and paste this URL into your browser:
https://thiruvonum.wordpress.com/2021/12/30/%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b0%e0%af%80-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b8%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a4%e0%ae%a9/

Thanks for flying with  WordPress.com